திருவள்ளூரில் பள்ளிக் கழிப்பறையை மாணவிகளே சுத்தம் செய்ததாக எழுந்துள்ள புகாரை அடுத்து, குற்றச்சாட்டு உண்மையெனில் தலைமை ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் ஜே.என்.சாலை அருகில் நகராட்சி அலுவலகம் எதிரே இயங்கிவருகிறது ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இங்கு சுமார் 950 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மொத்தம் பத்து கழிப்பறைகள் உள்ளன.
இந்தக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய, அரசு சார்பில் மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பணியாளர் இதற்கென நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை கடந்த வெள்ளிக்கிழமை அன்று (நவ. 24) ஒவ்வொரு வகுப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இருக்கும் மாணவிகளை அழைத்துள்ளார். அந்த மாணவிகளே தங்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று மணிமேகலை உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யாவிட்டால் பள்ளியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று அவர் மாணவிகளைக் கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் மாணவிகளே எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தனர். அழுதுகொண்டே அவர்கள் கழிப்பறைகளைச் சுத்தமாக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு நேற்று (திங்கட்கிழமை) மாணவிகளின் பெற்றோர், பள்ளித் தலைமை ஆசிரியையிடம் சென்று இதுகுறித்து விசாரித்தனர். அப்போது, அதிகம் பேசினால் மாணவிகளைப் பள்ளியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று தலைமை ஆசிரியை மணிமேகலை மிரட்டியதாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
'புகார் உண்மையெனில் கடும் நடவடிக்கை'
பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை மீதான குற்றச்சாட்டு உண்மையெனில், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.