அரூர்: தருமபுரி மாவட்டம் கடத்தூர் முதல் பாப்பிரெட்டிப்பட்டி வரையிலான பிரதான சாலையில் உள்ள 6 டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற வேண்டும், என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரியில் இருந்து கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சேலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிகவும் பரபரப்பான இச்சாலையில் கடத்தூர் முதல் பாப்பிரெட்டிப்பட்டி வரையிலான சாலையில் 6 டாஸ்மாக் மதுக்கடைகள் அமைந்துள்ளன.
கடத்தூர் பேரூராட்சியில் மின்வாரிய அலுவலகம் அருகிலும், பேருந்து நிலையம் அருகிலும் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதேபோல பையர்நத்தம் கிராமத்தின் மையப்பகுதியில் ஒரு கடை, வெங்கட சமுத்திரத்தில் 2 இடம், பாப்பிரெட்டிப்பட்டியில் குடியிருப்புப் பகுதியில் ஒரு கடை அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் அதிகமாக உள்ள இச்சாலைகளில் அமைந்துள்ள இந்த 6 மதுக்கடைகளால் தினசரி அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மதுக்கடைகள் அமைந்துள்ளப் பகுதிகளில் அதிக அளவிலான விபத்துகளும், அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு மற்றும் பெண்களை கிண்டல் கேலி செய்வதும் அதிகரித்துள்ளது. இதுதவிர போதையின் உச்சத்தில் வீடுகளின் முன் அரைகுறை ஆடைகளுடன் விழுந்து கிடப்பதும், ஆபாச வார்த்தைகளில் பேசுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிரதான சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மதுக்கடை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து பாப்பிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த வரலட்சுமி மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறியதாவது: நகர் பகுதியில் வீடுகள் உள்ள பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுபாட்டில்களை வீடுகள், சாலைகளில் உடைப்பது, ஆபாச வார்த்தை பிரயோகம், அலங்கோலமான நிலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் விழுந்து கிடப்பது போன்று பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இது குறித்து டாஸ்மாக் அலுவலரிடம் கேட்டபோது, தற்போதுள்ள கடைகளை அகற்றி வேறொரு இடத்தில் மாற்றி அமைக்க நிர்வாகம் முடிவு செய்தாலும், வேறு இடத்தில் கடை அமைக்க பொதுமக்கள் இடம் வழங்கவும், கடை திறக்கவும் பல்வேறு எதிர்ப்புகள் வருவதால் கடைகளை இடமாற்றம் செய்யும் முயற்சி தடைபட்டு வருகிறது, என்றனர்.