வண்டலூர்: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கட்டணங்களை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பார்வையாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டணம் அதிகரித்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகவும் கருத்து எழுந்துள்ளது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் சிறந்த உயிரியல் பூங்கா எனும் அங்கீகாரத்தையும், அதற்கான விருதையும் அண்மையில் பெற்றது. இந்த பூங்காவுக்கு சராசரியாக வார நாட்களில், 3 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து செல்லும் நிலையில், வாரயிறுதி நாட்களில் இந்தஎண்ணிக்கை கிட்டதட்ட 10 ஆயிரமாக உயரும்.
602 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் 2,382 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில், 42 வகை விலங்குகள் மாமிச உண்ணிகளாகும். தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவின் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50, பேட்டரி வாகனத்தில் சென்று பூங்காவை சுற்றி பார்க்க பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, லயன் சபாரி மற்றும் மான் சபாரியை சிறப்பு வாகனத்தில் சென்று பார்ப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.60 வசூல் செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவின் நுழைவு கட்டணம் ரூ.200-ஆக உயர்த்துவதற்கும் இதேபோல பூங்காவை சுற்றி பார்க்கும் பேட்டரி வாகன கட்டணம் ரூ.150, லயன் சபாரி மற்றும் மான் சபாரி சென்று பார்க்கும் வாகன கட்டணங்கள் ரூ.200, கேமரா மற்றும் வீடியோ கொண்டு செல்வதற்கான கட்டணங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம், அவர்கள் கொண்டு வரும் கேமரா, வீடியோ கட்டணங்கள் உட்பட, அனைத்து வகை கட்டணங்களும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு உயர்த்தி அரசாணை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இப்பூங்காவில் உள்ள விலங்குகளுக்கான உணவுக்கும், பூங்கா பராமரிப்பு பணிகள், ஊழியர்கள் சம்பளம் ஆகியவற்றிற்கு ரூ.10 கோடி செலவாகிறது என்றும் கூறப்படுகிறது. பூங்காவுக்கு ஆண்டுக்கு ரூ.15 கோடி வருவாய் வருவதாக தெரிகிறது. இது மட்டுமின்றி அரசு சார்பில் ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது பூங்காவில் சுமார், 8 கோடி வரை நிதி இருப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் கட்டணத்தை உயர்த்துவது சதாராண மக்களை பாதிக்கும் என்றும் 5 பேர் கொண்ட குடும்பம் இங்கு வந்தால் ரூ.3,000 வரை செலவாகும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எம்.பாலாஜி கூறியது: கட்டண உயர்வு அதிகமானால் சுற்றுலா பயணிகளின் வருகை குறையும். பூங்காவில் விலங்குகளை பார்ப்பதை தவிர போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
ஜி. மணிகண்டன் கூறும்போது, "முக்கிய பண்டிகை நாட்களில், பூங்காவுக்கு அனைத்து தரப்பு மக்களும் வருகை தருகிறார்கள். தற்போதுள்ள கட்டணங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கும். பூங்கா முழுவதையும் சுற்றி பார்க்க போதிய பேட்டரி வாகனங்கள் இல்லை. இவற்றை கூடுதலாக அரசு இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
வண்டலூரை சேர்ந்த எம். விஜயன் கூறியது: பூங்காவுக்கு ஆண்டுக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி அரசும் கூடுதல் நிதியை ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கி வருகிறது. விலங்குகள் பராமரிப்பு, உணவு, கட்டமைப்பு வசதிகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் செய்தாலும், பல கோடி ரூபாய் மீதமாக உள்ளது. எனவே தற்போது கட்டண உயர்வு தேவையற்றது. நவீன முறையில் பூங்காவை மாற்றி அமைத்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கலாம். பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மனநிறைவுடன் திரும்பி செல்ல பூங்காவில் ஒன்றும் இல்லை. இவ்வாறு கூறினார்.
நடுத்தர மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரை என சில இடங்கள் மட்டுமே உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் நடுத்தர மக்களுக்கு பெரிய சுமையாக இல்லாததால் அதிக அளவில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். சென்னை மற்றும், புறநகர் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பலர் பார்வையாளர்களாக வந்து செல்கின்றனர். பூங்கா நுழைவு கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் எங்கே செல்வார்கள்.
தற்போதுள்ள நிலையை பார்த்தால் கடற்கரைக்கு கூட நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறுவார்கள் போல் உள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் நலன் கருதி, வண்டலூர் பூங்கா நுழைவு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதை அரசு நிச்சயமாக கைவிட வேண்டும். இவ்வாறு கூறினார். இதே கருத்தை பலரும் வலியுறுத்தியுள்ளனர்.