சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஆன செயலி மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உடல் பரிசோதனை செய்து லைப்லைன் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
சென்னை லைப்லைன் மருத்துவமனை சார்பில் எளியமுறையில் உடல் பரிசோதனை மேற்கொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ட்ரஸ்டர் செயலி அறிமுகவிழா மற்றும் திருத்தணி பொதட்டூர்பேட்டையில் அந்த செயலி மூலம் 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட நிறைவு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவுக்கு மத்திய வெளியுறவு துறைஇணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், அவரது மனைவி சித்ரகலா ராஜ்குமார், காந்த் கருணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், ‘ட்ரஸ்டர்’ செயலியைமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதையடுத்து, பொதட்டூர்பேட்டையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு ட்ரஸ்டர் செயலி மூலம் பரிசோதனை மேற்கொண்ட நிகழ்வு உலகசாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதற்கான சான்றிதழை மருத்துவமனைக்கு அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் பேசியதாவது: உடல் நலம் குறித்து பரிசோதனை மேற்கொள்ள ட்ரஸ்டர் செயலியை உருவாக்கிய லைப் லைன் மருத்துவமனைக்கு வாழ்த்துகள். வசதிப்படைத்தவர்கள் மட்டுமே உடல் பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போதுஏழை எளிய மக்களும் எவ்வித செலவும் இல்லாமல், இந்த செயலி மூலம் தங்களது உடலில் உள்ள பிரச்சினைகள் குறித்து அறிந்து கொண்டு, அதற்கேற்ற சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் நாடு டிஜிட்டல் மயத்தை நோக்கி பயணிக்கிறது. மோடியின் ஊக்கம்தான் தற்போது இந்த செயலியை உருவாக காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் பேசுகையில், ‘இந்த செயலி மூலம் 11,800 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். உடலில் ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்த செயலி வெளிகாட்டி விடும்.
இந்த செயலி மூலம் உடலில் உள்ள பிரச்சினைகள் மட்டும் அல்ல, அதற்கான சிகிச்சையும் ஆன்லைன் மூலம் மருத்துவரிடம் மேற்கொள்ளலாம். வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை அடிப்படையாக கொண்டுதான் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பாதிப்பு வரும் முன்னரே இந்த செயலி நம்மை எச்சரித்து விடும். மேலும், இந்த செயலி முழு உடல் பரிசோதனைபோல செயல்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை’ என்றார்.