கோவை: மணிப்பூரில் தொடரும் வன்முறைக்கு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்பு பேரவைக் கூட்டம் என்.நடராஜன் தலைமையில் கோவையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.நஞ்சப்பன் ‘பழங்குடி மக்களின் உரிமைகளும் வாழ்வும்’ என்ற தலைப்பில் பேசினார்.
கூட்டத்தில், மணிப்பூர் வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பது, காப்புக்காடு பகுதிகளில் பாரம்பரியமாக வசித்து வரும் பழங்குடி மக்களை வனத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக வெளியேற்றக் கூடாது, செட்டில் மென்ட் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும்.
வனப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்பின் சிறப்புத் தலைவராக எம்.ஆறுமுகம், தலைவராக ஆர்வேட்டை ( நீலாம்பதி ), செயலாளராக என்.மீரா பாய் மற்றும் 35 பேர் கொண்ட குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் சி.சிவசாமி, துணை செயலாளர் குணசேகர், பொருளாளர் சி.தங்கவேல், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கே. வெங்கடாசலம், வழக்கறிஞர்கள் ரங்கநாதன், ஜி.பி.சக்திவேல், இப்ராகிம், சந்திரகுமார், எஸ்.ஆறுமுகம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர்.