சென்னை: சென்னை பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுரானா ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளியை வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் திறந்து வைத்தார்.
சுரானா குழுமம் சார்பில் சென்னை பெசன்ட் நகரில் ரூ.100 கோடி முதலீட்டில் சுரானா ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. ஐபி (International Baccalaureate-IB) எனும் சர்வதேச பாடத் திட்டத்தை மையமாக கொண்டுள்ள இப்பள்ளியில் ரோபோட்டிக் தொழில்நுட்பமும் கற்பித்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக, அமெரிக்காவில் உள்ள ஹைடெக் உயர்நிலைப் பள்ளியுடன் சுரானா குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், இப்பள்ளியின் தொடக்க விழா நேற்று நடந்தது. வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனர் அனில் அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பள்ளியை திறந்து வைத்தார். அவர் பேசியது:
தமிழகம் வாய்ப்புகள் நிறைந்த மாநிலம். அனைத்து துறைகளிலும் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. நான் படிக்கும்போது, வாய்ப்பு குறுகலாக இருந்தது. மருத்துவம், பொறியியல், சட்டம் என குறிப்பிட்ட துறைகளில் ஒன்றையே தேர்வு செய்யும் நிர்ப்பந்தமான நிலை இருந்தது. தற்போது காலம் மாறிவிட்டது.
எனவே, இன்றைய மாணவர்கள் தங்கள் கனவுகளை பின்தொடர்ந்து செல்ல வேண்டும். அது உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி தரும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் அப்போலோ குழும மருத்துவமனைகளின் துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி, சுரானா குழும நிறுவனங்களின் தலைவர் கைலாஷ்முல் துகர், செயலாளர் ஆனந்த் சுரானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அனில் அகர்வால், ‘‘தமிழகத்தில் பல்வேறு நாடுகள் முதலீடுசெய்ய ஆர்வமாக உள்ளன. முதலீடு செய்ய வரும் தொழில்நிறுவனங்களுக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு செய்து தருகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் மகளிர் முன்னேற்றம் கண்டுள்ளனர். தற்போது நாட்டிலேயே 2-வதுசிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதுகுறித்து கருத்து கூற முடியாது’’ என்றார்.