தமிழகம்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் காற்று வாங்கும் ஸ்மார்ட் கடைகள்: வியாபாரிகள் ஏற்காததால் வீணாகும் அவலம்

ம.மகாராஜன்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் அமைக்கும் திட்டத்துக்கு, கடற்கரை வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னையின் பிரபல பொழுதுபோக்கு இடங்களான மெரினா கடற்கரைக்கும், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கும் வருகை தரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதையொட்டி கடற்கரை பகுதிகளில் இயங்கும் கடைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மெரினா கடற்கரையில் 1600-க்கும் மேற்பட்ட கடைகளும், பெசன்ட் நகரில் 500-க்கும் மேற்பட்ட கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

பெரும்பாலான இந்த கடைகளை கடற்கரையொட்டி அமைந்திருக்கும் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தான் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மெரினாவில் இயங்கி வரும் கடைகள் பொலிவின்றியும், சுகாதாரமின்றியும் இருப்பதால் இவற்றை முறைப்படுத்த மாநகராட்சி சார்பில் திட்டமிடப் பட்டிருந்தது. அதனடிப்படையில், கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 900 வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கடைகளை இலவசமாக அமைத்து தர மாநகராட்சி முடிவு செய்தது.

ஆனால் இந்த 900 கடைகளில், 540 மட்டும் மெரினாவில் ஏற்கெனவே கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு என்றும், மீதுமுள்ள 360 கடைகளை பிற பகுதிகளை சேர்ந்த புதிய வியாபாரிகளுக்கு என்றும் ஒதுக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2020-ல் பெறப்பட்டன. அதிலிருந்து குலுக்கல் முறையில் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்பட்டது.

இவர்களுக்கு உலோகத்தால் ஆன, தரமிக்க 900 ஸ்மார்ட் கடைகளை தலா ரூ.1.50 லட்சம் விலையில் மாநகராட்சி வாங்கியிருந்தது. இதற்கிடையே, மெரினாவில் ஏற்கெனவே கடை வைத்திருக்கும் 1,600 பேரும் தொடர்ந்து கடை வைக்க அனுமதிக்க வலியுறுத்தியதுடன், மீனவர் அல்லாதோர் கடற்கரையில் கடைகள் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையொட்டி ஒதுக்கீடுக்கான ஆணை பெற்ற அப்பகுதி மீனவர்கள், நீண்ட காலமாக ஸ்மார்ட் கடைகளை வாங்காமல் இருந்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் ஸ்மார்ட் கடைகள் பழுதாகி, பயனற்று ஆங்காங்கே மைதானங்களில் குப்பை குவியல் போல் கிடக்கின்றன.

இதையடுத்து வாங்கிய ஸ்மார்ட் கடைகளை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பயனாளிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு இலவசமாக வழங்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்கட்டமாக அடையாளம் காணப்பட்ட 365 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, சச்சரவு இல்லாமல் அமைதியான முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “பெசன்ட் நகரில் உள்ள வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுடன் ஸ்மார்ட் கடைகள் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடற்கரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு கலந்தாலோசித்து, சுமூகமாக திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

கடற்கரையில் ஸ்மார்ட் கடைகளை அமைப்பதற்கான இடங்களை, வியாபாரிகளுடன் சேர்ந்து தேர்வு செய்ய இருக்கிறோம். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மொத்தமாக 400 ஸ்மார்ட் கடைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் முடிவுற்ற பின்னர், ஸ்மார்ட் கடைகள் அமைப்பதற்கான தேதிகள் அறிவிக்கப்படும்” என்றார்

இந்நிலையில், அமைக்கப்படவுள்ள ஸ்மார்ட் கடைகள் சிறியதாக இருப்பதாகவும், எங்களது வாழ்வாதாரம் அதனால் பாதிக்கப்படும் என்றும் பெசன்ட் கடற்கரை வியாபாரிகள், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: மீன் வியாபாரி குமாரி: பெசன்ட்நகர் கடற்கரையில் ஓடைமாநகர் குப்பத்தை சேர்ந்த மீனவர்களும், ஊரூர் குப்பத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே கடைகள் வைத்து, பிழைப்பு நடத்தி வருகிறோம். இதுதான் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம். கடற்கரை பகுதிகடைகளை ஒழுங்குப்படுத்தி தர மாநகராட்சி திட்டமிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதனை, ஏற்கெனவே இருக்கும் கடைகளை கொண்டு முறைப்படுத்த வேண்டும்.

அதேபோல சரியான இடைவெளிகளில், சுத்தமாக பராமரிக்க திட்டமிடலாம். அதைவிடுத்து ஸ்மார்ட் கடைகள் அமைக்க நினைப்பதை ஏற்க முடியாது. அவற்றால் எங்களுக்கு பயன் இல்லை. வியாபாரிகள் அமுதா மற்றும் ராஜி: கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் என்பது தேவையற்றது. பொதுமக்கள் கடற்கரைக்கு எளிமையை தேடி வருகின்றனர்.

இங்கு சிக்கன், மட்டன் போன்றவை விற்கப்படுவதில்லை. மீன்கள் மட்டுமே விற்கப்படுகின்றன. இதுபோன்ற ஸ்மார்ட் கடைகள், சாலையோர வியாபாரிகளுக்கு பயன்படுமே தவிர, கடற்கரை வியாபாரிகளுக்கு பயன்படாது. சுற்றுலா பயணிகள் மீன்களை சமைப்பதை நேரடியாகவே பார்க்க விரும்புவர். அதேபோல விஸ்தாரமாக இல்லாத கடைகளில், சமைப்பதற்கும் இடையூறாக இருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட் கடைகளுக்கு வாடகையும் கேட்கப்படும். தினந்தோறும் இங்கு வியாபாரம் நன்றாக நடக்காது. சுற்றுலா பயணிகளின் வருகையை பொருத்தே வியாபாரமாகும். அப்படி இருக்க இத்திட்டம் எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும். விளையாட்டு பலூன் வியாபாரி: அமைக்கப்படும் ஸ்மார்ட் கடைகளின் அளவு மிகவும் சிறியதாக உள்ளதால், அதனுள் விளையாட்டு பொருட்களை வைப்பது இயலாத காரியமாகும்.

மேலும் நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவைகளையும் உள்ளே வைக்க முடியாது. அக்கடைக்குள் முக்கியமான பொருட்களான சமையல் எரிவாயு, அடுப்புகள் போன்றவைகளை மட்டுமே வைக்க முடியும். மேலும் விற்பனை பொருட்களை விஸ்தாரமாக கண்கவரும் வகையில் வைத்தால்தான் அது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்.

அதைவிடுத்து, சிறிய அறைக்குள் அடைத்து வைத்தால் அது பயனளிக்காது. இதனால் வியாபாரம் குறையும். வியாபாரிகள், ஸ்மார்ட் கடைகளை வாங்க மறுக்கும்பட்சத்தில் மாநகராட்சி ஏற்கெனவே வாங்கி வைத்துள்ள, 900 ஸ்மார்ட் கடைகளின் நிலை என்னவாகும் என்பதே தற்போதையை கேள்விக் குறியாக உள்ளது.

SCROLL FOR NEXT