கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் உயிரிழந்த ராஜேஸ்வரியின் வீட்டுக்கு நேற்று விசாரணை நடத்த வந்த மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்புத் துறை அலுவலர் குழுவினர் 
தமிழகம்

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்து: உயிரிழந்த ஓட்டல் உரிமையாளர் குடும்பத்தினரிடம் மத்திய அரசு குழு விசாரணை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்து தொடர்பாக, ஓட்டல் உரிமையாளர் குடும்பத்தினரிடம் மத்திய அரசு குழுவினர் விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி காலை ரவி என்பவரின் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ரவி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடி விபத்துக்கு காரணம் குறித்து தமிழக அமைச்சரும், மத்திய அமைச்சரும் மாறுபட்ட காரணங்களைத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், விசாரணையில் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இதனால், சிபிஐ விசாரணைக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் வீட்டில் நேற்று பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்புத் துறை தலைமை கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது, உள்ளூர் போலீஸார், வருவாய்த் துறை அலுவலர்கள் யாரையும் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை.

ராஜேஸ்வரியின் கணவர், மகன், மகள், மருமகள் உள்ளிட்டோரிடம் நேற்று மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை விசாரணை நடந்தது. அப்போது, வெடி விபத்துக்கான காரணம் குறித்தும், போலீஸாரின் விசாரணை நடவடிக்கை குறித்தும், வேறு ஏதாவது அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT