சென்னை: எவ்வளவு எதிர்ப்பு குரல்கள் வந்தாலும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றும் அனைத்து அதிகாரமும் மத்திய அரசுக்கு உள்ளது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெ.சாய் தீபக் பேசினார்.
சாஸ்த்ரா நிகர் நிலைப் பல்கலைக்கழகம் சென்னை மையம் சார்பில் பொது சிவில் சட்டம் தொடர்பான குழு விவாதம் நேற்று வட பழனி மையத்தில் நடந்தது. பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.வைத்திய சுப்ரமணியம் வரவேற்றார். பொது சிவில் சட்டம் தொடர்பான குழு விவாதத்தை பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.கண்ணன் தலைமையேற்று நடத்தினார்.
இந்நிகழ்வில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய். குரேஷி பேசுகையில், ‘‘இன்று அதிகபட்சமாக விவாதிக்கப்படும் பொது சிவில் சட்டம் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை. இந்த சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எதனால் இதை எதிர்க்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டால் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இந்த சட்டத்தை சிலர் அரசியல் நோக்கத்துக்காக தவறாக சித்தரிக்கின்றனர்” என்றார்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஜன் பூவையா பேசுகையில், ‘‘பொது சிவில் சட்டம் மத ரீதியிலான பழக்க, வழக்கங்கள் மற்றும் நடை முறைகளுக்கு எதிரானது அல்ல. எனவே இந்த சட்டத்தைப் பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது நாட்டில் உள்ள இருபாலருக்கும் பொதுவானது” என்றார்.
காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி பேசுகையில், ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் கூட பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவது தொடர்பாக பிற்காலத்தில் தேவையைக் கருத்தில் கொண்டு முயற்சிக்கலாம் என்று தான் கூறியுள்ளாரே தவிர கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை.
தனிப்பட்ட மத ரீதியிலான சட்டங்களில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் சீரமைத்து திருத்தங்கள் கொண்டு வரலாம். அதை யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அதை பொது சிவில் சட்டம் மூலமாகத்தான் சரிசெய்ய வேண்டும் என முன்னெடுப்பதைத்தான் எதிர்க்கிறோம்” என்றார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெ.சாய்தீபக் பேசுகையில், ‘‘இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. பொதுவெளியில் ஒரு சட்டத்தை அமல்படுத்தும் போது அதை அனைத்து தரப்பும் ஏற்கும் வகையில் உரிய விளக்கங்களுடன் சரியான பாதையில் முறையாக கொண்டு செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இந்துக்களுக்கும்கூட பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தனர்.
அதை இந்துக்கள் எதிர்க்கவில்லை. எவ்வளவு எதிர்ப்பு குரல்கள் வந்தாலும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றும் அனைத்து அதிகாரமும் சட்ட ரீதியாக மத்திய அரசுக்கு உள்ளது.ஆனால் இந்த சட்டத்தை எந்த அரசியல் கட்சியினரும் தைரியமாக முன்னெடுத்து செல்ல விரும்புவதில்லை. ஒரு கட்டத்தில் பின்வாங்கி விடுகின்றனர். ஆட்சியாளர்களுக்கு இந்த மனநிலை மாற வேண்டும் என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.