தமிழகம்

இந்து கோயில் நடைமுறையில் கிறிஸ்தவர்கள் தலையிட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: இந்து கோயில் நடைமுறையில் கிறிஸ்தவர்கள் தலையிட தடை விதித்து, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ராமதாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள நடுகுடியிருப்பு முகில்தங்கம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், உயர் நீதிமன்றக் கிளை யில் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் ஏழுதரீரமுடைய அய்யனார் மற்றும் காளி கோயில் உள்ளது. இக்கோயில் நிர்வாகத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிலர் தலையிட்டு வருகின்றனர்.

இவர்களின் தலையீடு காரணமாக, கோயில் நடைமுறை மற்றும் விழாக்களில் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது. அமைதியான முறையில் கோயிலில் வழிபாடு நடத்த முடியாத நிலை உள்ளது. இந்தாண்டு திருவிழாவுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். இதனால் வட்டாட்சியர் சமாதானக் கூட்டம் நடத்தினார்.

அதில் யாரும் திருவிழா நடத்தக்கூடாது என வட்டாட்சியர் உத்தரவிட்டார். எனவே வட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, எங்கள் தரப்பில் கோயில் திருவிழா நடத்தவும், இந்து கோயில் நிர்வாகத்தில் கிறிஸ்தவர்கள் தலையிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து, நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: இந்து கோயில் நடைமுறையில் மறு உத்தரவு வரும் வரை கிறிஸ்தவ மதத்தினர் தலையிட தடை விதிக்கப்படுகிறது. கோயில் விழாவை மனுதாரரும், அறநிலையத் துறை உதவி ஆணையரும் இணைந்து நடத்த வேண்டும். மனு தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் பதிலளிக்க வேண்டும். விசாரணை செப். 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT