தமிழகம்

மணிப்பூர், ஹரியாணாவில் கலவரம் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக: முத்தரசன் 

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல், ஜனநாயக முறைப்படி நடக்குமேயானால் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முத்தரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயமாக தோற்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட காரணத்தால், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் போக்கினை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற மற்ற துறைகளை மிகவும் தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

பாஜக தங்களது தோல்விகளை மறைப்பதற்காக மணிப்பூர், ஹரியாணா போன்ற மாநிலங்களில் கலவரங்களை உருவாக்கி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற குறுகிய நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கின்றார். இதைக் காட்டிலும் ஜனநாயக சீர்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி இந்த நாட்டினுடைய நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார். ஆனால், அந்நிய நாட்டினுடைய நாடாளுமன்றத்தில் சிங்கம் போல் கர்ஜிப்பார். இதிலிருந்து மோடியும், அவரது கட்சியினர் தவறாகக் கொள்கையை பின்பற்றுகிறார்கள் என்பது தெரிகிறது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமேயானால் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாஜக தோற்கும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT