தமிழகம்

பள்ளி கழிப்பறைகளை பராமரிக்க ரூ.160 கோடி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செய்திப்பிரிவு

பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க ரூ.160.77 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை சமர்ப்பித்த அறிக்கை விவரம்:

வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இல்லாத காரணத்தால் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர இயலாத நிலை ஏற்படும். அதுபோன்ற குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவி ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கும் திட்டம் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தத் தொகை இனி ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இந்தத் தொகை, அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி மற்றும் அதன் முதிர்வுத் தொகை அந்த மாணவரின் கல்விச் செலவு மற்றும் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும். இத்திட்டத்தால் அரசுக்கு ரூ.2.70 கோடி கூடுதலாக செலவு ஏற்படும்.

பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிப்பதற்காக ரூ.160.77 கோடி ஒதுக்கப்படும். இதன்மூலம் ரூ.56.55 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க, 1 முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் 45.76 லட்சம் மாணவர்களுக்கு முதன்முறையாக கையெழுத்துப் பயிற்சி ஏடுகள் வழங்கப்படும்.

மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 63.18 லட்சம் மாணவர்களின் கலைத்திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்க ஒவியப் பயிற்சி ஏடுகளும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் 10 லட்சம் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செய்முறை பயிற்சி ஏடுகளும் வழங்கப்படும். இதற்காக ரூ.5.10 கோடி செலவாகும்.

நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடப்பாண்டில் 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும். இப்பள்ளிகளுக்கு 5 முழுநேர ஆசிரியர்கள், 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதற்கு ஆண்டுக்கு ரூ.3.74 கோடி செலவு ஏற்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வேலைநாட்கள், தேர்வுகளை அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ளவும் முதன்முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு (பள்ளி டைரி) வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT