தமிழகம்

தமிழகத்தில் 18 நிலையங்கள் உட்பட 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி: பிரதமர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்

செய்திப்பிரிவு

சென்னை: அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் உட்பட 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்த, அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை, ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.6) அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் உள்ள 25 ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு, பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி வைக்கிறார்.

அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். குறிப்பாக, ரயில் நிலையங்களில் லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, நுழைவுவாயில் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், வாகன பார்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா உள்ளிட்டவை அமைக்கப்படும்.

ரூ.381 கோடியில்...: தமிழகத்தில் முதல்கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம்,கரூர், திருப்பூர், போத்தனுார், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்கள், ரூ.381 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன.

இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். சென்னை எழும்பூர்–கடற்கரை இடையே 4-வது புதிய பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

பராமரிப்பு மற்றும் ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகளுக்காக 26 மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பிறகு, மீண்டும் முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT