இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்கள் அணிக்கு ஒதுக்கியுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் கொடுத்த ஆதாரங்களை பரிசீலித்து தேர்தல் ஆணையம் நல்ல, நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது. எங்கள் பக்கம் நியாயம் இருந்ததாலேயே இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
90% நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பது தவறான கருத்து" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமியே இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதன்மூலம் கட்சியின் பெயர், கட்சியின் சின்னம், கட்சியின் லெட்டர் பேடு என அனைத்தையும் அதிகாரபூர்வமாக பயன்படுத்துவதற்கான உரிமை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு கிட்டியுள்ளது.
சின்னத்துக்கான போட்டி..
முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.
சின்னம் முடக்கப்பட்ட பிறகு சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த முதல்வர் பழனிசாமி அணியினர் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தனர். இதனால் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் டிடிவி தினகரன் தரப்பினர் தனி அணியாகவும் பிரிந்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வந்தனர்.
இருதரப்பும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில் நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 23, 2017) அன்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலுக்காக..?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் கடந்த 11 மாதங்களாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 31-க்குள் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான இறுதி முடிவை எடுக்க, தமிழக தலைமைத் தேர் தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இரு தினங்களில் டெல்லி செல்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஏதுவாக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் இன்று இந்த முடிவை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இரட்டை இலை துளிர்த்த கதை..
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளரின் செல்வாக்கு, சாதி பலம் என்பன உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிட்டுப் பார்த்த எம்ஜிஆர், மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார்.
அப்போது தனக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகினார் வேட்பாளர் மாயத்தேவர். அப்போது அவரிடம் 16 சுயேச்சை சின்னங்கள் காட்டப்பட்டன. அவற்றிலிருந்து இரட்டை இலையைத் தேர்வுசெய்தார் மாயத்தேவர். அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போது அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது.
இரட்டை இலை அதிகாரபூர்வமான சின்னமாக மாறியதும் அதைச் சுவர்களில் வரைந்து மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தினர் தொண்டர்கள். மக்களைச் சந்திக்கும் போது கைகூப்புவதுபோல இரட்டை விரல்களைக் காட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டார் எம்ஜிஆர். அதே வேகத்தில் 1974-ல் கோவை மேற்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, அதிமுக வேட்பாளரான அரங்கநாயகம் இரட்டை இலையில் வெற்றிபெற்று முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.