மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மண்டல கிராம வங்கிகளின் ஆய்வு கூட்டம், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. படம்:எஸ்.சத்தியசீலன் 
தமிழகம்

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மண்டல கிராம வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் - மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மண்டல கிராம வங்கிகள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

தென்மண்டல கிராம வங்கிகளின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய நிதியமைச்சக செயலாளர், மத்திய ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகள், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நிதித் துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், நபார்டு, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா, பிரதம மந்திரி முத்ரா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, பிரதமமந்திரி ஸ்வாநிதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த மண்டல கிராம வங்கிகள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

கடன் வைப்பு விகிதம், வாராக் கடன் வசூலிப்பது ஆகியவற்றில் தேசிய அளவில் ஒப்பிடுகையில், தென்மண்டல கிராம வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு விகிதத்தை மண்டல கிராம வங்கிகள் மற்றும் ஸ்பான்சர் வங்கிகள் மேம்படுத்த வேண்டும்.

தொழில்நுட்பம், கடன் மேலாண்மை அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த வங்கி சேவை (கோர் பேங்கிங் சிஸ்டம்) ஆகியவற்றை மண்டல கிராம வங்கிகள் காலக்கெடுவுக்குள் சிறந்த முறையில் செய்யப்பட வேண்டும் .

அதிக டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகரும் மத்திய அரசின் முயற்சிக்கு ஏற்ப, டிஜிட்டல் முறையில் செயல்படும் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதில் மண்டல கிராம வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய புதுமையான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும்.

மண்டல கிராம வங்கிகள் மத்தியரிசர்வ் வங்கி மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். பிரதம மந்திரி ஸ்வாநிதியின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதைத் தவிர, மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற அதனுடன் இணைந்த விவசாயத் துறைக்கும் கடன் வழங்குவதை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT