மதுரை: தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளால் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மாநிலம் முழுவதும் `என் மண், என் மக்கள்' என்ற பெயரிலான நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, மதுரை மாவட்டம் மேலூரில் நேற்று காலை பொதுமக்களிடையே பேசியதாவது: விவசாயிகளுக்கு ரூ.2,700 மதிப்பிலான உர மூட்டை ரூ.260-க்கு விற்கப்படுகிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் உரம் வழங்குகிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும்.
அமைச்சர் உதயநிதியும், முதல்வரின் மருமகன் சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதனால் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித் துறை பறிக்கப்பட்டு, வேறு துறை வழங்கப்பட்டுள்ளது.
மதுபானம் ஏழைக் குடும்பங்களைப் பாதிக்கிறது. டாஸ்மாக் கடைகளால் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க பாஜக நடவடிக்கை மேற்கொள்ளும். இதனால் பனை மரம் வைத்திருப்போர் பணக்காரர்களாவார்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
திமிறிய ஜல்லிக்கட்டு காளை: முன்னதாக, மேலூர் அரசுகல்லூரி அருகில் அண்ணாமலைக்கு ஜல்லிக்கட்டு காளை மூலம் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென ஜல்லிக்கட்டு காளை திமிறியது. இதனால் அங்கு கூடியிருந்தோர் விலகி ஓடினர். பின்னர், ஜல்லிக்கட்டு காளையை வணங்கிவிட்டு அண்ணாமலை நடைபயணத்தை தொடர்ந்தார்.