சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகள் பயணச்சீட்டுகளை பேடிஎம் (Paytm) செயலி மூலம் பெறுவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் சென்னையில் நேற்று இதை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெட்ரோ பயணச் சீட்டுகளைப் பெறுவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே வாட்ஸ்-அப் மூலம் க்யூஆர் (QR) குறியீடு பயணச்சீட்டு பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது பேடிஎம் (Paytm App) செயலி மூலம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டைப் பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த சேவைகள் தற்போதுள்ள 20 சதவீத கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது.
இதன்மூலம், மெட்ரோ ரயில் பயணிகள் தங்கள் பேடிஎம் செயலியில் புறப்படும் மற்றும் சேரும் நிலையத்தைக் குறிப்பிட்டு க்யூஆர் பயணச்சீட்டை வாங்க முடியும்.
இவ்வாறு சித்திக் கூறினார்.