காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரியில் தூர்வாரும் பணி மிகவும் மந்தகதியில் நடந்து வருகிறது. இப்பணிகளை மழைக்காலத்துக்கு முன்பு முடித்து விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், இந்த ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களையும் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட உத்திரமேரூர் ஏரி 4,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் 20 அடி ஆழம் கொண்ட 13 மதகுகள் உள்ளன. ஏரி முழு கொள்ளளவு அடைந்தால் உபரிநீர் வெளியே வர 3 கலங்கல்கள் உள்ளன.
இந்த ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறுகின்றன. 5,436 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரி நிரம்பினால் விவசாயிகள் முப்போகமும் பயிரிடுவார்கள். விவசாயம் மட்டுமின்றி இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் சுற்றியுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.
இந்த சூழலில், கடந்த சில ஆண்டுகளாக பெய்த கனமழை காரணமாக உத்திரமேரூர் ஏரியின் கரைகள் வலுவிழந்து காணப்பட்டன. இதனால் ஏரி உடையும் அபாயம் நிலவியது. இதனால், ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் ரூ.18.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கரைகளை பலப்படுத்தி தூர்வாருவதற்கான பணிகள் கடந்த மார்ச் 10-ம் தேதி தொடங்கின.
இந்நிலையில், உத்திரமேரூர் ஏரி தூர்வாரும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், மழைக்காலத்துக்கு முன்பு ஏரியை தூர்வாரி முடிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், நீர் வரும் வரத்து வாய்க்கால்கள் முழுவதும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதை அகற்ற வேண்டும். பாலாற்றில் இருந்து உத்திரமேரூர் ஏரிக்கு நீர் வரும் கால்வாயை சரிசெய்ய வேண்டும். ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து உத்திரமேரூர் ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் சந்திரனிடம் கேட்டபோது, ‘‘ஏரியை தூர்வார கடந்த மார்ச் மாதம் பூஜை போட்டாலும், கரை பலவீனமான பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மட்டுமே நடந்துள்ளது. ஏரியை தூர்வாரும் நடவடிக்கை பெரிதாக நடக்கவில்லை. எனவே, ஏரியை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’’ என்றார்.
சமூக ஆர்வலர் சிவபிரகாசம் கூறும்போது, ‘‘உத்திரமேரூர் ஏரி மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று. இதை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், 5,436 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. மழைக்காலம் தொடங்கி நீர் நிரம்பிவிட்டால் தூர்வார முடியாது. தற்போதே பல இடங்களில் நீர் உள்ளது. எனவே, நீர் இல்லாத இடங்களில் தற்போதே தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து நீர்வளத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘உத்திரமேரூர் ஏரியில் தூர்வாரும் பணியை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம். மழைக்காலத்துக்குள் அந்த பணியை முடிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.