முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம் 
தமிழகம்

தஞ்சை | வாகன தணிக்கையின்போது விபத்தில் பலியான தலைமைக் காவலர்: முதல்வர் ரூ.25 லட்சம் நிவராணம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தஞ்சாவூரில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் காவல் நிலைய தலைமைக் காவலர், பழனிவேல் (38) வியாழக்கிழமை (ஆக.3) மாலை, உதவி ஆய்வாளர் தலைமையில், குருங்களூர் வெண்ணாற்றுப் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் காயமுற்று சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இரவென்றும் பகலென்றும் பாராமல், தம் குடும்பத்தினரையும் மறந்து, நம் காவல்துறையினர் கடமையாற்றி வருகின்றனர். அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் பழனிவேலின் அகால மரணம் காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பேரிழப்பாகும்.

உயிரிழந்த தலைமைக் காவலர் பழனிவேலின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு, இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன், என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT