மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிதி நெருக்கடி குறித்து தமிழக நிதித்துறை செயலரை சந்தித்து முறையிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
தமிழகம்

நிதி நெருக்கடியில் சுந்தரனார் பல்கலைக்கழகம்: தமிழக நிதித்துறை செயலரை சந்தித்து முறையிட முடிவு

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பது குறித்து தமிழக நிதித்துறை செயலரை சந்தித்து முறையிட இப்பல்கலைக்கழக 44-வது பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப் பல்கலைக்கழக 44-வது பேரவை கூட்டத்தை துணைவேந்தர் ந.சந்திரசேகர் தொடங்கி வைத்துப் பேசினார். இதையடுத்து பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துணைவேந்தர் பதிலளித்தார். முனைவர் பட்ட ஆய்வு படிப்பை முடிக்க ஆகும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் தட்கல் முறையில் மதிப்பீடு செய்யும் திட்டம் கொண்டுவர, சாத்தியக்கூறுகள் இல்லை. முனைவர் பட்ட ஆய்வுக்கான மதிப்பீட்டுக்கு யுஜிசி 6 மாத காலவரையறையை நிர்ணயித்துள்ளது. அதற்குள் மதிப்பீட்டை முடிக்கிறோம்.

மாணவர்களுக்கு பருவத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, "தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு முடிந்த 15 நாட்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் வகையில் நடைமுறை உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வுகளை தமிழில் எழுத வாய்ப்பு அளிக்கப்படாது. முனைவர் பட்ட ஆய்வு படிப்புக்கு யுஜிசி நெறிமுறைகளின்படி இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. தமிழை தவிர்த்து பிறமொழிகளை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் கூடுதலாக ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வாய்ப்பில்லை" என்று பதிலளித்தார்.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டுக்குப்பின், தற்போதுதான் சிண்டிகேட் ஒப்புதலுடன் பல்கலைக்கழக ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. எனவே கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று பதில் அளிக்கப்பட்டது, என்று அவர் பதிலளித்தார். அப்போது, பல்வேறு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள், இடஒதுக்கீடு, கல்வி கட்டணம், பெறப்பட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளிப்படையாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதில்லை என்று உறுப்பினர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் தத்தளிப்பது குறித்து பேரவை உறுப்பினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது: "தமிழகத்திலுள்ள 13 மாநில பல்கலைக்கழகங்களில் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு 28 துறைகள் செயல்படுகின்றன. இங்கு பணியாற்றுவோருக்கு ஊதியம் அளிக்க நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. அரசு ரூ.78 லட்சத்தை மட்டும் 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்குகிறது. ஆனால் ரூ.5 கோடி வரையில் செலவு ஏற்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு போதுமான நிதியை அரசு அளிப்பதில்லை. பல்கலைக்கழகங்களை மூச்சுத்திணற வைப்பது அரசுக்கு அழகல்ல. எனவே தமிழக நிதிச்செயலரை சந்தித்து பல்கலைக்கழக நிதிநிலையை எடுத்துக்கூறி நிதியை பெறுவதற்கு குழுவை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபோல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நிர்வாகம். ஆசிரியர்கள் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விவகாரத்தில் பல்கலைக்கழகம் தலையிட வேண்டும் என்றும் அக்கல்லூரிக்கு உண்மை அறியும் குழுவை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்க வேண்டும். அக்கல்லூரியில் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே நடைபெறும் மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது

SCROLL FOR NEXT