சென்னை: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மீறி போராட்டத்தில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால், சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரியும் என்எல்சி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, கடந்த 8 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
ஆனால் என்எல்சி நிர்வாகம் தரப்பில் வழக்கறிஞர் நித்யானந்தம் ஆஜராகி, என்எல்சி நிர்வாகத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதால், தங்களது அன்றாடப் பணிக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட யாரையும் அனுமதிக்க முடியாது. எனவே, என்எல்சி நிர்வாகத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்த மாவட்ட எஸ்.பி. அனுமதி வழங்கக்கூடாது. எந்தெந்த இடங்களில் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை மாவட்ட எஸ்.பி. நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறி கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றுகூறி, விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும், என்எல்சி நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த பிரச்னைக்குத் தீர்வுகாண, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கலாமா என்பது குறித்து என்எல்சி நிர்வாகம் தரப்பிலும் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால், சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்