சென்னை: ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி சென்னை கடற்கரையில் புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து பெண்கள் வழிபாடு நடத்தினர். மேலும், கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழா ஆடிப்பெருக்கு. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்படும். இந்த நாளில் நீர்நிலைகளில் நீர் பெருகி வர வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பூஜை செய்து மக்கள் வழிபடுவார்கள்.
தமிழகத்தில் திருச்சி காவிரி கரையில் இந்த விழா உற்சாக கொண்டாடப்படும். திருச்சியை தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி, மதுரை வைகை ஆற்றங்கரையிலும் ஆடிப்பெருக்கு கோலாகலமாக நடக்கும். அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சென்னையைப் பொருத்தவரை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் நேற்று திருமணமான பெண்கள், புத்தாடை உடுத்தி பழைய திருமாங்கல்யத்துக்கு பதிலாக புதிய மஞ்சள் கயிற்றில், புதிய திருமாங்கல்யம் அணிந்து வழிபாடு செய்தனர்.
திருமணம் ஆகாதவர்கள், மஞ்சள் சரடு அணிந்து பிரார்த்தனை செய்து, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபட்டனர். மேலும், ஆடிப்பெருக்கை ஒட்டி மயிலாப்பூர் கோலவிழியம்மன், முண்டகக்கன்னியம்மன், பாரிமுனை காளிகாம்பாள், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
அங்கு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது. மேலும், நீர்நிலைகளில் வழிபாடு நடத்த முடியாத சென்னை வாசிகள் பலர் வீட்டில் பூஜை செய்து வழிபட்டனர்.