சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு மீட்டர்களுக்கு மாதம் ரூ.60 என 2 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.120 வாடகையாக வரும் செப்டம்பர் மாதம் முதல் வசூலிக்கத் தமிழக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதற்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கெனவே நிதிச்சுமையில் உள்ள வணிகர்களுக்கு மேலும்சுமையை அதிகரிப்பதோடு, வணிகத்தை விட்டு வெளியேறும் நிலைமை உருவாகிவிடக்கூடாது. இதைத் தமிழக அரசு கவனத்தில்கொண்டு, மின் மீட்டர் வாடகை,மின் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றை தவிர்த்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் காக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஜிஎஸ்டி சார்ந்த வழக்குகளை அமலாக்கத் துறை விசாரிக்கஅனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், அதிகபட்சமாக 28% சதவீதம் வரி விதிப்பதைக் குறைக்க வலியுறுத்தியும், தென்மண்டலம் சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா கர்நாடகா உள்ளிட்ட வணிகநிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செப்.5-ம்தேதி நேரில் சந்தித்து முறையிட இருக்கின்றோம் என்றார்.