பொன்னேரி: கொசஸ்தலை ஆற்றில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எண்ணூர் பகுதியில் மீனவ மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டன.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், வடசென்னை அனல்மின் நிலையத்தின் 3-வது நிலை பணிக்காக எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின் கோபுரத்தை அமைத்து வருகிறது. ஆறும், கடலும் சங்கமிக்கும் அப்பகுதி, மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியாகும். அங்கு எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடித்து வருகின்றனர்
இங்கு உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, கடந்த மாதம் 26-ம் தேதி படகுகளில் மீனவர்கள் சென்று உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எண்ணூர் மீனவ மக்கள் நலசங்கம் சார்பில் நேற்று எண்ணூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக சென்னைமற்றும் பழவேற்காடு பகுதிகளை சேர்ந்த பல்வேறு மீனவ சங்கங்களின் நிர்வாகிகள் என, 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்ட இடத்துக்கு மீனவ மக்கள் ஊர்வலமாக வந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மீனவ மக்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக எண்ணூர், தாழங்குப்பம் பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்கும் பணி சிறிது தூரத்திலேயே இருந்ததால், மீனவ மக்கள் அந்த பகுதிக்கு செல்லாத வகையில், 500-க்கும்மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.