திண்டுக்கல்: இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்ட தக்காளி விலை, தற்போது குறையத் தொடங்கியுள்ளது. அறுவடை தொடங்கி வரத்து அதிகரித்ததால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் கிலோ ரூ.70-க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், பழநி, வேடசந்தூர், திண்டுக்கல், வத்தல குண்டு, அய்யலூர் உள்ளிட்ட ஊர்களில் தக்காளிக்கென தனியாக மொத்த மார்க்கெட்டுகள் உள்ளன. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் தக்காளிகளை இந்த மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு தக்காளிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு தக்காளி அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டதால் விளைச்சல் அதிகமாக இருந்தது. போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். இதனால் கடந்த ஆண்டு இறுதி முதல் தக்காளி பயிரிடும் பரப்பளவு குறையத் தொடங்கியது. இதையடுத்து வரத்து குறைந்ததால் தக்காளி விலை இதுவரையில்லாத அளவுக்கு உச்சம் தொட்டது. அதிகபட்சமாக சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்பனையானது.
இந்நிலையில், தற்போது வத்தலகுண்டு காய்கறி சந்தைக்கு நேற்று ஒரே நாளில் 2 டன் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. 16 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.1,000-க்கு விற்பனை யானது.
தற்போது மொத்த மார்க் கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி மணிகண்டன் கூறுகையில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தக்காளி வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டுத் தக்காளி ரகம் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ள தால், கடந்த 2 நாட்களாக விலை குறைய தொடங்கியுள்ளது. இன்னும் சில வாரங்களில் தக்காளி வரத்து அதிகரித்து விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்று கூறினார்.