தமிழகம்

தேங்கிய மழைநீரால் தொற்றுநோய் ஆபத்து; உடனே வெளியேற்ற நடவடிக்கை தேவை: ராமதாஸ்

செய்திப்பிரிவு

பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதேநிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்துள்ளது. இதனைத் தடுக்க புறநகர் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் 8 நாட்களாகியும் இன்னும் அகற்றப்படவில்லை. தமிழக அரசின் செயல்படாத தன்மையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வழங்கிய அறிவுரைகளை தமிழக அரசு புறந்தள்ளியதன் பாதிப்புகளை சென்னை புறநகர் பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

சென்னை தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, கோவிலம்பாக்கம்,  சிட்லப்பாக்கம், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், கொடுங்கையூர், இராதாகிருஷ்ணன் நகர், கொளத்தூர்  உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்திருக்கிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள் தான் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது. 8 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கிக் கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியேறி விட்டனர்.

கோவிலம்பாக்கம், வேளச்சேரி, வடசென்னை மற்றும் சென்னையின் மைய பகுதிகளில் பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்துவிட்டதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதேநிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்துள்ளது.

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சரும், அமைச்சர்களும் பார்வையிடும் நிகழ்வுகள்  வெறும் சடங்குகளாகவே நடைபெற்று வருகின்றன. அவர்கள் வரும் நேரத்தில் நிவாரணப் பணிகள் விரைவாக நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டாலும் கூட அப்பணிகளில் சொல்லிக்கொள்ளும்படி எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

உலக வரைபடத்தில் மிக முக்கிய இடம் பிடித்துள்ள சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் மழையால் தேங்கிய நீர் 8 நாட்களாக அகற்றப்படவில்லை என்பது உலக அரங்கில் சென்னையின் பெருமையை சிதைத்து விடும். ஆனால், இதுகுறித்த எவ்வித அக்கறையும், புரிதலும், அக்கறையும் இல்லாமல் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.  200 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தான். ஆனால், நோய் பரவுவதற்கான ஆதாரங்களை ஒழிக்காமல் சிகிச்சை மட்டும் வழங்குவதால் எந்த பயனும் ஏற்படாது.

தண்ணீர் வடிந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்திக் கொண்டு, புறநகர் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் மீண்டும் இதேபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மின்சார மரணங்களை தடுக்கவும்:

அதேபோல், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதிப்பதால் நிகழும் மரணங்களையும் அரசு தடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, "பருவமழைக் காலங்களில் மனதை வேதனைக்குள்ளாக்கும் மற்றொரு நிகழ்வு மின்சாரம் தாக்கி பொதுமக்கள் உயிரிழப்பது ஆகும். சென்னை கொடுங்கையூரில் இரு சிறுமிகளும், திருவாரூரில் ஒரு விவசாயியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் இன்று இன்னொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். தமிழகம் முதன்மை மாநிலமாக வளர்ந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிலை இன்னும் நீடிப்பதை அவமானமாகவே கருத வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் மின்பாதைகள் பாதுகாப்பாக அமைக்கப்படுவதையும், பெரு மழைக் காலங்களிலும் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட  மாவட்டங்களிலும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, இயல்பு நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT