தென்காசி: திருநெல்வேலி- தென்காசி இடையே ரூ.430.71 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. பழைய பேட்டையில் இருந்து ஆலங்குளம் வரை 22.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தொகுப்பாகவும், ஆலங்குளம் முதல் தென்காசி ஆசாத் நகர் வரை 22.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தொகுப்பாகவும் பணி நடைபெற்று வருகிறது.
பழைய பேட்டை - ஆலங்குளம் இடையே 2022 செப்டம்பர் 2-ம் தேதிக்குள்ளும், ஆலங்குளம் - ஆசாத் நகர் இடையே 2022 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள்ளும் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் 18 மாதங்களில் நான்குவழிச் சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், பணிகள் தொடங்கி 30 மாதங்கள் ஆகியும் இன்னமும் முடிவடையவில்லை.
நான்குவழிச் சாலையின் ஒரு பகுதியாக பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் சாலையில் தெற்கு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. தெற்கு பகுதியில் பணியை முழுமையாக முடித்துவிட்டு, வடக்கு பகுதியில் பணிகளை தொடங்கினால் போக்குவரத்துக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்பட்டிருக்காது. ஆனால், தெற்கு பகுதியில் பணிகளை முழுமையாக முடிக்காமல் வடக்கு பகுதியிலும் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இரண்டு பாலங்களையும் ஒரே நேரத்தில் கட்டுவதால், பாலம் பணி நடைபெறும் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. போக்குவரத்துக்காக இருபுறங்களிலும் குறுகலான அளவுக்கே இடம் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. பில்லர்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள ராட்சத பள்ளங்கள், மேம்பால பணிகளுக்காக சாரம் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தளவாட பொருட்கள் என, ஆபத்தான பயணத்தை வாகன ஓட்டிகள் எதிர்கொள்கின்றனர்.
குறுகலான மண் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் புழுதி பறக்கிறது. இதை அடிக்கடி சீரமைத்து, தண்ணீர் தெளிக்கும் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பணி நடைபெறும்போதும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
மேலும், ரயில்கள் கடந்து செல்லும்போது ரயில்வேகேட் மூடப்பட்டு திறக்கப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் ஆவதால் காலை நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தாமதமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சாலையின் ஓரங்களில் உள்ள வீடுகள், கடைகள் புழுதி படலமாக காட்சியளிக்கின்றன. பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்கவும், சிரமம் ஏற்படாத வகையில் போக்குவரத்துக்கு பாதை வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.