தமிழகம்

லாரி மீது கார் மோதி விபத்து: 3 மருத்துவ மாணவர்கள் பலி - காஞ்சிபுரத்தில் பரிதாபம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

சேலத்தைச் சேர்ந்த யுவராஜ்(25), மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(25), சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(26), பாளையங் கோட்டையைச் சேர்ந்த பால கிருஷ்ணன்(25), சேலத்தை சேர்ந்த மோகன்ராஜ்(25) ஆகிய 5 பேரும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் ஆவர். இவர்கள் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு காரில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த சின்னையன்சத்திரம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரியின் பின் பகுதியில் கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யுவராஜ், ஐயப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பாலகிருஷ்ணன், மோகன்ராஜ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT