சென்னை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொதுமக்கள் இன்று அதிக அளவில் பத்திரப் பதிவு மேற்கொள்வார்கள் என்பதால், வழக்கத்தைவிட கூடுதலாக டோக்கன் வழங்க பதிவுத் துறை நடவடிக்கை எடுத் துள்ளது.
தமிழக பதிவுத் துறை கணினிமயம் ஆக்கப்பட்டு, ஸ்டார் 2.0 திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் விரும்பும்நாள், நேரத்தில் பதிவு மேற்கொள்ளும் வகையில், டோக்கன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் 60 டோக்கன் வழங்கப்படுகிறது.
ஆடிப்பெருக்கு போன்ற விசேஷ நாட்களில் சொத்து வாங்குவதற்கான பதிவை மேற்கொண்டால், அதுபோன்ற வாய்ப்பு தொடரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இதனால், விசேஷ நாட்களில் பத்திரப் பதிவை மேற்கொள்ள விரும்புகின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு, முக்கியமான விசேஷ நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்குவது, விடுமுறை நாளில் பதிவு அலுவலகங்களை இயங்கச் செய்வது, பதிவுக்கு கூடுதல் நேரம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் வசதிக்காக பதிவுத் துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படு கிறது. இதை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக, தினசரிவழக்கமாக வழங்கும் டோக்கன்களைவிட கூடுதலாக 50 சதவீதம் அல்லது தேவைக்கேற்ப வழங்க பதிவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்மூலம், அதிகமானோர் இன்று பத்திரப் பதிவை மேற் கொள்ள முடியும்.