தமிழகம்

அண்ணாமலை நடைபயணத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கருத்து

செய்திப்பிரிவு

கோவை: பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கோவை டாடாபாத் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட செயலாளர் சி.பத்ம நாபன், திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணிப்பூர் கலவரம் 3 மாதத்துக்கும் மேலாக நீடிக்கிறது. இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. மணிப்பூர் முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ரயிலில் மன நிலை பாதிக்கப்பட்ட காவலரால் எப்படி இஸ்லாமியர்களாக பார்த்து சுட முடிந்தது? இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியாதவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார். அண்ணாமலையின் நடைபயணத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. கோடநாடு வழக்கில் நிறைய மர்ம முடிச்சுகள் இருக்கின்றன.

உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இண்டியா கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவே பல இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தி, பெரும்பான்மை மக்களை திசை திருப்ப முயல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT