தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் வாங்க முடிவு: மெட்ரோ நிறுவன கருத்துருவுக்கு தமிழக அரசு ஒப்புதல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டத்தில், வரும் 2028-ம் ஆண்டில் உத்தேச பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, ரூ.2,820.90 கோடியில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கருத்துருவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சி துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54.1 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, 4 பெட்டிகளுடன் கூடிய 52 ரயில்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கொள்முதல் செய்திருந்தது. காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் சேவை அளிக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் கட்டமைப்பு முழுவதையும் இயக்குவதற்காகவும், 2028-ம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கீட்டு, ரூ.2,820.90 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்படும்.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கருத்துருவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருத்துரு மத்திய அரசின் வழியாக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு கடனுதவி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT