திருப்போரூர் ஒன்றியத்தில் வசிக்கும் இருளர் பழங்குடியினருக்கு மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் குயில்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். 
தமிழகம்

மானாம்பதியில் ரோட்டரி கிளப் மூலம் ரூ.7.5 கோடி மதிப்பில் இருளர் பழங்குடியினருக்கு கான்கிரீட் வீடுகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே மானாம்பதியில் ரோட்டரி கிளப் மூலம் ரூ.7.5 கோடி மதிப்பில் இருளர் பழங்குடியினருக்கு கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகளை அமைச்சர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.

திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய மானாம்பதி ஊராட்சியில் குயில் குப்பம் பகுதி உள்ளது. இங்கு குடிசை வீடுகளில் வசித்த இருளர் பழங்குடியினர் 63 பேருக்கு ரூ. 7.5 கோடி மதிப்பில் மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு வீட்டுக்கும் 1 பிரிட்ஜ், டி.வி., பீரோ, குக்கர், மிக்சி, கிரைண்டர், காஸ் அடுப்பு, சமையல் பாத்திரங்கள், மின் விசிறி போன்றவையும் வழங்கப்படுகின்றன. அபிராமி திரையரங்க உரிமையாளரும், மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று புதிய வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத், ரோட்டரி கிளப் முன்னாள் இயக்குநர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, ரோட்டரி கிளப் தலைவர் பிரகாஷ் வைத்தியநாதன், செயலாளர் விஜய் தூயமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருப்போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திருப்போரூர், இள்ளலூர், காயார், வெண்பேடு உள்ளிட்ட இடங்களில் தி.மு.க. கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்.

SCROLL FOR NEXT