மதுரை: மதுரையில் சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
விபத்துகளை தடுக்க போக்கு வரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சாலையில் தடுப்பு வேலி, வேகத்தடை அமைத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவ்வப்போது சோதனை நடத்தி விதிமீறும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். எனினும், சாலை விபத்துகளை எதிர்பார்த்த அளவுக்கு கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு மாவட்ட வாரியாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் இக்குழுவினர் கள ஆய்வு செய்தனர். தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி உடனிருந்தார். மதுரை மாநகரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இக்குழு ஆய்வு செய்தது.
இது குறித்து ஆய்வாளர் தங்கமணி கூறியதாவது: கள ஆய்வுக் குழு தமிழகத்தில் அதிக அளவில் விபத்துகள் நடக்கும் சாலைகளை ஆய்வு செய்து வருகிறது. இக்குழுவில் காவல், நெடுஞ்சாலை, வருவாய், சுகாதாரம், பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட சாலையில் எதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
அங்கு செய்ய வேண்டிய மாற்றங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அந்த அறிக்கையை காவல்துறை அதிகாரிகள் மூலம் மாநில சாலை பாதுகாப்பு தலைவருக்கு அனுப்பி வைக்கின்றனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் விபத்துகளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.