முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷ் மீது பதிவான மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் ஆதிநாராயணன் என்பவர் தாம் அளித்த புகாரின் மீது, நடிகர் ரித்தீஷ் மீது சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி சிபிசிஐடி விசாரணை கேட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ''தமிழகத்தில் குவாரி உள்ளிட்ட பல தொழில்களை தொடங்க உள்ளதாக கூறி, நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ரித்தீஷ் என்ற சிவகுமார், என்னிடம் 2.18 கோடி ரூபாயை பல்வேறு தவணையாக வாங்கினார். இந்த பணத்தை ரித்தீஷின் மனைவி, உறவினர் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கினேன். இந்த பணத்தை பெற்றுக் கொண்ட ரித்தீஷ், தொழிலை தொடங்கவில்லை.
இதையடுத்து, வாங்கிய பணத்தை காசோலைகள் மூலமாக ரித்தீஷ் திருப்பிக் கொடுத்தார். அதை வங்கியில் செலுத்தியபோது, அவரது கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. எனவே, என்னிடம் பெரும் தொகையை ஏமாற்றிய ரித்தீஷ், அவரது மனைவி ஜோதீஸ்வரி, உறவினர் நாகநாத சேதுபதி, சுரேஷ்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை காவல்துறையிடம் புகார் செய்தேன்.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரித்தீஷ் உள்ளிட்டோர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதன்பின்னரும், அவரை காவல்துறை கைது செய்யவில்லை. ரித்தீஷ் எம்.பி.யாக இருந்தவர். தற்போது அதிமுகவில் உள்ளார். ஆளும் கட்சியில் உள்ளதால், அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
எனவே, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரித்தால், நேர்மையாக இருக்காது. அதனால், ரித்தீஷ் உள்ளிட்டோர் மீதான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க சென்னை காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வரும் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.