விழுப்புரம்: விழுப்புரம் அருகே பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த வருவாய் கோட்டாட்சியர் தனது உதவியாளரிடம் காலணிகளை கொண்டுவரச் சொன்ன சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அருகே ஸ்டாலின் நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வாழ்ந்து வந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்கான ஆய்வு, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி முன்னிலையில் நடந்தது. அப்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி ஆய்வு மேற்கொள்ள ஜீப்பிலிருந்து இறங்கும்போது காலில் காலணி இல்லாமல் இறங்கி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது அந்த இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தவுடன் கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி தான் காலணி அணியவில்லை என்பதை உணர்ந்து தன் உதவியாளரிடம் செருப்பை எடுத்து வருமாறு கூறினார்.
இதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கவனித்து, கோட்டாட்சியரின் உதவியாளரை பின் தொடர்வதை உணர்ந்த உடன் இருந்த அதிகாரிகள், அந்த உதவியாளருக்கு பத்திரிகையாளர்கள் கவனிப்பதை சைகை மூலம் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து ஜீப்புக்கு பின்புறம் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் கையை மட்டும் நீட்டி காலணியை தரையில் வைத்தார். அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் காலணியை அணிந்துகொண்டு ஆய்வை தொடர்ந்தார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் ஆய்வுக்கு சென்ற கள்ளகுறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் தன் உதவியாளரிடம் ஷூவை கொண்டுவர கூறியது பேசும்பொருளானது என்பது குறிப்பிடதக்கது.