சென்னை: மாற்றுத் திறனாளிகள் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கக் கோரி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆக.7.ம் தேதி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: சமூகப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 பெறும் மாற்றுத் திறனாளி யாரேனும் ஒருவர் குடும்பத்தில் இருந்தால், அந்த குடும்பத்தின் தலைவி மகளிர் உரிமை தொகை பெற முடியாது என நிபந்தனை வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குடும்பங்கள் பாதிக்கப்படுவர்.
மாற்றுத் திறனாளிகளுடைய கூடுதல் செலவுகள், சுமைகளை ஈடுசெய்ய வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை, மற்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் தொகைகளுடன் எந்த வகையிலும் காரணம் காட்டக்கூடாது. மாற்றுத் திறனாளிகளுக்கு விரோதமாக வகுக்கப்பட்டுள்ள இந்த விதியைத் தளர்த்தி,மாற்றுத் திறனாளிகள் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் ஆக.7-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.