சென்னை: சென்னை அருகே வானில் பறக்கும் தட்டு போன்று தென்பட்டது குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதிக்கு அருகே உள்ள கடலோரப் பகுதியில் கடந்த ஜூலை 26-ம் தேதி மாலை 5.30 மணியளவில் ஓய்வுபெற்ற சிபிசிஐடி போலீஸ் டிஜிபி பிரதீப் பிலிப், தனது குடும்பத்தினருடன் இருக்கும்போது, வானில் கண்னை கவரும் விதமாக அதிக வெளிச்சத்துடன் கூடிய ஒளிக்கீற்று தெரிந்துள்ளது.
அதை உடனே பிரதீப் தனது செல்போனில் படம் பிடித்தார். அந்த படத்தை அவர் பெரிதாக்கி பார்த்தபோது அதில் பறக்கும் தட்டுகள் போன்று உருவம் தெரிந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தார். இந்த தகவல் பொதுவெளியில் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதன்மை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டபோது, ‘‘பறக்கும் தட்டுகள் மூலம் வேற்று கிரகவாசிகள் புவிக்கு வந்ததற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. புவிக்கு அருகே உள்ள நட்சத்திர மண்டலமான ‘பிராக்சிமா சென்டரி’-க்கு ஒளியின் வேகத்தில் பயணித்தால்கூட அங்குபோக 4 ஆண்டுகளாகும்.
எனவே, பல நூறு ஆண்டுகள் பயணித்தால் மட்டுமே நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள முடியும். மனிதர்கள் நிலவுக்கு சென்றபோதுகூட அங்கு ஒருநாள் தங்கி ஆய்வு செய்தனர். அதைவிட பலமடங்கு தூரத்தை கடந்துவரும் வேற்று கிரகவாசிகள் புவிக்கு வந்து சில நிமிடங்கள் மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை’’ என்று தெரிவித்தார்.