ராமேசுவரம்: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வங்க மாநிலம் திகாவிலிருந்து 430 கி.மீ. கிழக்கே நிலை கொண்டிருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்க தேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், நாகலாந்து, ஒடிசா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உத்தர காண்ட், சட்டீஸ்கர், பிகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக துறைமுகங்களில் பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.