தமிழகம்

ஊழல் ஆட்சி ஒழிக செல்ஃபோன் டவரில் ஏறி இளைஞர் கோஷம்: அண்ணா சாலையில் பரபரப்பு

செய்திப்பிரிவு

அதிமுக, பாஜக ஆட்சியில் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும், அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர் ஒருவர் அண்ணா சாலையில் உள்ள செல்ஃபோன் கோபுரம் மீது ஏறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று (சனிக்கிழமை) காலை சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே பெரியார் சிலை அமைந்துள்ள பகுதியில் இருக்கும் செல்போன் கோபுரம் மீது  இளைஞர் ஒருவர் ஏறினார். உயரே சென்ற அவர் ஊழல் ஆட்சி ஒழிய வேண்டும் என கோஷமிட்டதோடு தற்கொலை மிரட்டலும் விடுத்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறை வீரர்கள் கோபுரம் மீது இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்றுவிட சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் சம்பவத்தை போட்டோ எடுப்பதும் வீடியோ எடுப்பதுமாகவும் இருந்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளை இடத்தைவிட்டு நகருமாறு அனுப்பியதால் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

துண்டு காகிதங்களை வீசி எறிந்தார்..

மேலே இருந்தவாறு அவர் துண்டு காகிதங்களை வீசி எறிந்தார். அதில், அதிமுக, பாஜக ஆட்சியில் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும், அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

காவலரின் அங்கலாய்ப்பு..

மீட்புப் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், "ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன" என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

அண்மையில் பட்டினப்பாக்கம் பகுதியில் இதேபோல் இளைஞர் ஒருவர் செல்ஃபோன் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

- படங்கள்: எல்.சீனிவாசன்

SCROLL FOR NEXT