ராமநாதபுரம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் 4-வது நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் உள்ள ஆர்.எஸ்.மங்கலத்தில் மக்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. எங்கு பார்த்தாலும் குடங்களுடன் தள்ளுவண்டிகளைத் தள்ளிச்செல்லும் நிலை உள்ளது. அமைச்சர் கே.என். நேரு கடந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வோம் என்றார். ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. நாட்டில் 10 கோடி பனைமரங்கள் உள்ளன.
தமிழகத்தில் 5 கோடி பனைமரங்களும், அதில் 1.50 கோடி மரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நான்கில் மூன்று பங்கை மூடிவிட்டு, தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்றால், ஏழை பனை, தென்னை தொழிலாளிகளின் வாழ்க்கைத்தரம் உயரும். ஆனால் திமுகவினரின் சாராய ஆலைகள் ஆதாயம் பெற டாஸ்மாக் கடைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தரணி ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ப.சிதம்பரம் மீது விமர்சனம்: தொடர்ந்து சிவகங்கையில் நேற்று மாலை நடைபயணம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: மக்கள் பணிக்காக தான் அமைச்சர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் எந்த பணியும் செய்யாமல் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு துறை இல்லா அமைச்சராக்கி ஊதியம் கொடுக்கின்றனர். தந்தை, தாய், மகனை வெவ்வேறு வழக்குகளில் அமலாக்கத்துறை விசாரிப்பது இந்தியாவிலேயே ப.சிதம்பரம் குடும்பத்தை தான். இவ்வாறு அவர் கூறினார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா,
மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.