கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் இறுதிகட்ட பணிகளை தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். உடன் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்.படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

புதிய பேருந்து முனையத்தில் 99% அபணிகள் நிறைவு: கிளாம்பாக்கத்தில் தலைமைச் செயலர் ஆய்வு

செய்திப்பிரிவு

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்த நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இறுதிகட்ட பணிகளை விரைந்து முடிக்கஅப்போது அவர் அறிவுறுத்தினார்.

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களில் செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணங்களை மேற்கொள்வதற்காகவும் சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இம்முனையத்திலிருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் ஏற்கெனவே தாம்பரம் மாநகர காவல் ஆணையருடன் ஆலோசனை நடந்துள்ளது.

மேலும் கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும் கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை 7 கிமீ தூரத்துக்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை 18 கிமீ தூரத்துக்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை 10 கிமீ தூரத்துக்கும் சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஏற்கெனவே ஆலோசித்துள்ளது.

இந்நிலையில் பேருந்து முனையத்தின் 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இறுதிகட்ட பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று பார்வையிட்டார். மேலும் பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் நடைபெறும் பணிகள் குறித்தும் சிஎம்டிஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி‌ குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், கண்காணிப்பு பொறியாளர் சீனிவாச ராவ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT