‘‘மன வளர்ச்சி குன்றிய மகளை, கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று மதுரையை சேர்ந்த அபிராம சுந்தரி என்பவர், முதல்வரின் தனிப்பிரிவில் திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்த பிறகு, செய்தியாளர்களிடம் அபிராமசுந்தரி கூறியதாவது:
‘‘நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து வருகிறேன். எனக்கும் திருச்செந்தில்குமார் என்பவருக்கும் 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள். கடன் தொல்லை காரணத்தால் 2002-ம் ஆண்டு என் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், 2 குழந்தைகளுடன் திருப்பரங்குன்றத்தில் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.
மூத்த மகள் ஆரோக்கியத்துடன் இருக்கிறாள். ஆனால், 2வது மகள் ரம்யாவுக்கு மன வளர்ச்சி குறைபாடு உள்ளது. 15 வயதாகும் அவளால் நடக்கவோ, பேசவோ, சாப்பிடவோ முடியாது. நானே சாப்பாடு ஊட்டி விடுகிறேன். கழிவறைக்கும் ஒருவர் துணை இல்லாமல் சென்று வர முடியாது.
நான் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறேன். நான் இல்லாத நேரத்தில், படுக்கையிலேயே ரம்யா இயற்கை உபாதைகளை கழித்து விடுகிறாள். இதனால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்கிறார்.
இந்த பிரச்சினையால் அடிக்கடி வீடு மாற வேண்டி உள்ளது. மகளை பராமரிக்க விடுப்பு எடுத்தால், தொடர்ந்து வருவதாக இருந்தால் மட்டும் கூலி வேலைக்கு வர வேண்டும். இல்லையென்றால் வர வேண்டாம் என்று முதலாளிகள் கடிந்து கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் ரம்யா பருவமடைந்து விட்டாள். அதன் பின்னர் என் மகளை பார்த்து கொள்ள முடியவில்லை. வெளியே வேலைக்கு செல்லவும் பயமாக இருக்கிறது. மருத்துவர்களும் எனது மகளை குணப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டனர்.
நான் பிஏ படித்துக் கொண்டிருந்த போது திருமணம் நடந்ததால், படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் உருவானது. ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். எனவே, தமிழக முதல்வர் எனக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் எனது மகளை கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டும்.’’
இவ்வாறு அபிராம சுந்தரி கண்ணீருடன் கூறினார்.