தமிழகம்

மாநகர், மாவட்ட தலைநகர்களில் 10 புதிய தொழிற்கல்லூரி விடுதிகள்: அமைச்சர் அப்துல் ரஹீம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மாநகர்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் ரூ.2.8 கோடியில் 10 புதிய தொழிற்கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் கூறினார்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் அப்துல் ரஹீம் வெளியிட்ட அறிவிப்புகள்:

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக செயல்பட்டு வரும் 1,305 விடுதிகளில் அவசர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடுதி காப்பாளர், காப்பாளினிகளுக்கு அதிகாரம் வழங்கி, ஒரு விடுதிக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வீதம்மொத்தம் ரூ.1.95 கோடி வழங்கப் படும்.

மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கி வரும் 54 கள்ளர் சீரமைப்பு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாணவ, மாணவியரை 100 விழுக்காடு தேர்ச்சி பெறச் செய்யும் முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

மாநகர்கள் மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் 5 பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், ஒரு சீர்மரபினர் விடுதி உள்பட ரூ.2.8 கோடியில் 10 புதிய தொழிற்கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும். இதனால் ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.

வக்ஃப் வாரியம்

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 5 கணினிகள் மற்றும் உபகரணங்கள் வீதம் 40 கணினிகள் மற்றும் உபகரணங்கள் ரூ.22.4 லட்சத்தில் வழங்கப்படும். வக்ஃப் வாரியத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டியதற்காக செலுத்த வேண்டிய கடன் தொகையான ரூ.48 லட்சத்தை மத்திய வக்ஃப் கழகத்துக்கு திருப்பிச் செலுத்திட ஏதுவாக அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT