தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துவரும் நிலையில் இன்று (நவம்பர் 1-ம் தேதி) தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் என கணித்துக் கூறியிருக்கிறார் வானிலை ஆர்வலர் மற்றும் பதிவர் 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான்.
இன்றைய மழை நிலவரம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/tamilnaduweatherman/) அவர் இன்று காலை 9.15 மணியளவில் பதிவிட்டிருப்பதாவது:
சென்னை மற்றும் கடலோர டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கிவிட்டது. மேகங்கள் மெதுவாக உள்நோக்கி நகர்ந்து வருகின்றன. லேசான மழையாகத் தொடங்கி சில இடங்களில் மிதமான அளவு மழை பெய்யும். ஒருசில வேளைகளில் மட்டும் சற்று கனமழையாக பெய்யக்கூடும்.
நாகப்பட்டினம், காரைக்கால், சிதம்பரம், புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, சென்னையின் பிற பகுதிகளில் இன்று மிதமான அளவு மழை இருக்கும். நிறைய அடுக்கடுக்காக மழை மேகங்கள் தொடர்ந்து கரையில் இருப்பதைக் காணமுடிகிறது. எனவே, நேற்றுபோல் இன்று இருக்காது. இன்றைக்கு பகலிலும் நல்ல மழை இருக்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.