கடலூர்: என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நெய்வேலி என்எல்சி நிர்வாகம் வளையமாதேவி, மேல வளையமாதேவி, கத்தாழை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி விளையும் நெற்பயிர்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணிகளை, கடந்த 5 நாட்களுக்கு முன்பு பலத்த காவல் துறையின் பாதுகாப்புடன் என்எல்சி இந்தியா நிறுவனம் தொடங்கியது. இதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 29-ம் தேதி நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இதனைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த இடம் வன்முறைக் காளமாக மாறியது. 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக சார்பில் சேத்தியாதோப்பு அருகே கூட்ரோடு பகுதியில் என்எல்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கேட்டார், எம்எல்ஏ அருள்மொழி தேவன். காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, இன்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவினர் பல அவருடன் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன், எம்எல்ஏ அருள்மொழிக்கு ஆதரவாக அவருடன் சேர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
எம்.எல்.ஏ அருள்மொழி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அரசிடம் திமுக அரசு அடிபணிந்து இருப்பதால் தைரியமாக அவர்கள் நெற்பயிர்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவும் பாஜகவும் நெய்வேலி விவாகரத்தில் கூட்டாக உள்ளன. மேலும், நெற்பயிரை வளர்ந்த பிறகு அதனை அகற்ற நடவடிக்கை எடுத்து இருக்கலாம். நெற்பயிரை அழித்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து தமிழக அரசு உயர்மட்ட குழு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றார்.