சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி எடுக்கப்படுகிறதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, இத்திட்டம் செப்.15-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் செப்.5-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரச ஒதுக்கியுள்ளது.
புகார் மனு: இந்நிலையில், சென்னை செனாய் நகரைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இரா.அன்புவேந்தன், ஜூலை 27-ம் தேதி தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தப் புகாரை தொடர்ந்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச்செயலர், ஆளுநரின் செயலர் ஆகியோருக்கு ஆணையத்தின் இயக்குநர் எஸ்.ரவிவர்மன் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்ப தாவது: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக இரா.அன்புச்செல்வனிடம் இருந்து புகார் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 338-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி ஆணையம் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது.
15 நாட்களுக்குப் பதில்: எனவே, இந்த புகார் மீதான நடவடிக்கை, உண்மை நிலை மற்றும் தகவல்களை 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் தங்களிடம் இருந்து எந்தப் பதிலையும் பெறாத பட்சத்தில், ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரைவில் விளக் கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.