வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் பரவிய காட்டுத்தீ காரணமாக சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சுமார் 10 கி.மீ. தூரம் கரடு முரடான வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டும்.
சதுரகிரியில் ஆடி மாத அமாவாசை வழிபாட்டுக்கு அனுமதி வழங்கியபோது கடந்த ஜூலை 15-ம் தேதி காட்டுத்தீ பரவியது. இதனால், பக்தர்கள் அடிவாரம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக ஜூலை 30 முதல் ஆக.2 வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.
நேற்று முன்தினம் மாலை சாப்டூர் வனச்சரகம் 5-வது பீட்டில் சதுரகிரி மலையை ஒட்டியுள்ள ஊஞ்சக்கல் பகுதியில் காட்டுத்தீ பற்றியது. இதனால் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி சதுரகிரி செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்திலேயே நின்று தரிசனம்செய்துவிட்டு மலையேற முடியா மல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதற்கிடையே, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக மழையின்றி வனப்பகுதி வறண்டு இருப்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம்ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.