என். சின்னமாயன் 
தமிழகம்

வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்வு - தமிழகத்தில் தக்காளி விலை எப்போது குறையும்?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தக்காளி சந்தை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உயர்வு நீடித்து நேற்று ஒரு கிலோ ரூ.170 முதல் ரூ.200 வரை விற்பனை ஆனது. இதனால், மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சந்தை, மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி, பரவை சந்தைகள், திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை, கோவை மலுமிச்சம்பட்டி சந்தை மற்றும் சென்னை கோயம்பேடு சந்தை போன்றவை தக்காளி வியாபாரத்துக்கு முக்கியமானவை. இந்தச் சந்தைகளில் நிர்ணயிக்கப்படும் விலையே தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வியாபாரிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையவில்லை. தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்கள் தக்காளி சாகுபடியில் முன்னிலையில் உள்ளன. இம்மூன்று மாநிலங்களிலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரே நேரத்தில் பெய்த மழையால் தக்காளிச் செடிகள் அழிந்தன.

கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விவசாயம் அதிகம். அதனால், தமிழகத்தில் தக்காளி விலை குறைந்தால் அங்கிருந்து தக்காளி விற்பனைக்கு வரும். விலையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். ஆனால் கர்நாடகா, ஆந்திராவில் இந்த முறை கனமழை பெய்ததால் அங்கு விளைந்த தக்காளி அம்மாநிலத் தேவைக்கே போதுமானதாக இல்லை. தமிழகத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடைக்கு வரவில்லை. அதனால், தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியது.

வியாபாரி விளக்கம்: இந்நிலையில், தமிழகத்தில் தக்காளி அறுவடை தொடங்கியும் விலை குறையவில்லை. நேற்று மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.2 ஆயிரம் வரை விற்றது. கிலோ ரூ.150 முதல் ரூ.170 வரை விற்றது. அதனால், சில்லறை விற்பனைக் கடைகளில் நேற்று தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்றதால் மக்கள் கவலை அடைந்தனர்.

மதுரை மாட்டுத்தாவணி சென்டரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் என்.சின்னமாயன் கூறியதாவது: நான் 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்கிறேன். தக்காளி சந்தை வரலாற்றிலேயே தற்போது ஒரு மாதத்துக்கும் மேலாக விலை குறையாமல் இருக்கிறது. இதுபோல தொடர்ந்து விலை உயர்ந்து நான் பார்த்ததில்லை.

தமிழக தக்காளி கொள்முதல்: தமிழகத்தில் தற்போது தக்காளி அறுவடை தொடங்கி உள்ளது. ஆனால், கர்நாடகா, ஆந்திராவில் மழை நின்றபாடில்லை. அதனால் 2 மாநில வியாபாரிகளும் தமிழக தக்காளியை கொள்முதல் செய்வதால் விலை குறைந்தபாடில்லை. இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழை, கொளுத்தும் வெயிலும் காய்கறி விலையேற்றத்துக்கு ஒரு காரணம்.

15 நாட்களில் குறையும்: இன்னும் ஓரிரு வாரங்களில் ஆந்திராவின் அனந்தபூர், கர்நாடகாவின் கல்யாண துர்கா, தாவண்கரே உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளி வரத்து தொடங்கிவிடும். அனந்தபூர் தக்காளி சந்தை இந்தியாவுக்கே தக்காளியை வழங்கிவிடும் அளவு மிகப் பெரிய சந்தை. அப்போது தமிழகத்தில் விலை குறையத் தொடங்கும். இன்னும் 15 நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT