கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கு வெடி விபத்து தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், வெடிக்காத வெடிகள் மற்றும் தரைமட்டமான கிடங்கின் மண் ஆகியவற்றை ஆய்வுக்காக சேகரித்தனர்.
கிருஷ்ணகிரி பழையப்பேட்டை நேதாஜி சாலையில் ரவி என்பவரது பட்டாசு கிடங்கில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 கடைகள் தரைமட்டமாகின. இதில், பட்டாசு கிடங்கு உரிமையாளர் ரவி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். 10 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் வேலூர் மண்டலத்தைச் சேர்ந்த வெடிபொருள் நிபுணர் கணேஷ் தலைமையிலான 2 அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பட்டாசு கிடங்கு உள்ளிட்ட 5 கடைகள் இருந்த கட்டிடத்தின் உரிமையாளரான மரியபாக்கியத்தின் மகன் அந்தோணியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது, வாடகைக்கு விடப்பட்ட கடைகள் எண்ணிக்கை, எத்தனை ஆண்டுகளாக ரவி வாடகைக்கு இருந்து வந்தார். அங்கு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதா, எங்கெல்லாம் பட்டாசுகள் விற்பனைக்குச் செல்லும் என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து பதிவு செய்தனர்.
மேலும், தரைமட்டமான கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பெரிய குழாய் போன்ற வெடிக்காத வெடி, சணல், திரி, மருந்து நிரப்பும் கட்டைகள், வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு கிடங்கின் மண் உள்ளிட்ட பொருட்களை ஆய்வுக்காக சேகரித்தனர்.
இதுதொடர்பாக ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கூறும்போது, “இங்கு சேகரிக்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் அறிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைப்போம்” என்றனர். ஆய்வின்போது, வட்டாட்சியர் சம்பத், டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.