தமிழகம்

திருவள்ளூர் | வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக இன்று முதல் ஆக.5 வரை மின் விநியோகம் நிறுத்தம்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்பாதைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அரசுத் துறைகள் மேற்கொள்ளும். இதன்படி மழைநீர் வடிகால்கள், பெரியகால்வாய் மற்றும் நதி முகத்துவாரங்களை சென்றடையும் வண்ணம் இணைப்பு வழங்கப்பட்டு மழைநீர் தேங்காமல் தங்குத் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுத்தல், ஆகாய தாமரை அகற்றும் பணிகள், சுரங்க பாதைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற உயர் அழுத்த மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைத்தல், சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதன் ஒருபகுதியாக மின்பாதைகள் பராமரிப்பு பணிகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முன்கூட்டியே மாவட்ட வாரியாக மேற்கொள்ளும். இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னர் மின்பாதைகள் பராமரிப்பு, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் மற்றும் மின் பாதையில் உரசும் மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்பாதைகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதில், இன்று திருநின்றவூர் - திருவேங்கட நகர், முத்தமிழ் நகர், பெரியார் நகர், வேப்பம்பட்டு பகுதியிலும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெள்ளியூர், செம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் 2-ம் தேதி நேமம், குத்தம்பாக்கம், கன்னடபாளையம், மடவிளாகம், பிரயம்பத்து, மேலகொண்டையார், புலியூர்கண்டிகை, செஞ்சி, மதுராகண்டிகை, ராமன்கோயில், மடத்துகுப்பம், விநாயகபுரம், மணவூர், சென்னாவரம், அண்ணாநகர், சின்னக்களக்காட்டூர், பேரம்பாக்கம், கொட்டையூர், செய்யம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் 3-ம் தேதி திருநின்றவூர் கிராமம், கொசவன்பளையம், ராஜன்குப்பம் பகுதிகளிலும் 5-ம் தேதி செம்பரம்பாக்கம் கோத்ரேஜ் அடுக்குமாடி குடியிருப்பு, கோவிலாம்பூண்டி, ஜாபர் நகர், காரனை, விடையூர், ஆட்டுப்பாக்கம், நெமிலிஆகரம், கலியனூர், பழையனூர், வேணுகோபாலபுரம், கூடல்வாடி, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, மப்பேடு, கீழச்சேரி, செவ்வாப்பேட்டை, கந்தன்கொல்லை, தொழுவூர், தண்ணீர்குளம், ராமாபுரம், வெள்ளகுளம், சிட்கோ தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதனை திருவள்ளூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனால் மின் விநியோக தடை நேரத்தை கணக்கிட்டு முன்கூட்டியே அதற்கேற்றபடி பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும் என்றும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களையும், தொழிற்சாலைகளை நடத்துவோரையும் மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT